”என்னை பைத்தியக்கார நாய் என்றனர்” – பிரதமர் மோடி வேதனை

1730

என் தாயைக்கூட விட்டு வைக்காமல் காங்கிரஸ் கட்சி விமர்சித்தது என வேதனையுடன் கூறிய பிரதமர் மோடி, அதையொட்டி ஒரு பட்டியலே வெளியிட்டார்.

பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிற நிலையில் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்து வருகிறது.

இதுவரை இல்லாத வகையில் தனிமனித விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஊழலில் முதல் இடம் பிடித்தவர் என பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமையன்று பேசுகையில், “எனது தந்தையை அவமதித்தாலும்கூட, நான் பிரதமர் மோடி மீது அன்பு வைத்திருக்கிறேன்” என கூறினார்.

அதற்கு பதிலடி தருகிற வகையில், 12-ந் தேதி பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிற அரியானா மாநிலம், குருசேத்திரத்தில் நேற்று நடந்த பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்போது அவர். “காங்கிரஸ் கட்சி தனது அன்பு அகராதியில் இருந்து என்னை நோக்கி தவறான வார்த்தைகளை வீசி வருகிறது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

“காங்கிரஸ் கட்சி என்னை ஹிட்லர், தாவூத் இப்ராகிம், முசோலினி போன்றோருடன் எல்லாம் ஒப்பிட்டது” என கூறினார்.

மேலும், “காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை புழு பூச்சியுடன் ஒப்பிட்டார். இன்னொரு தலைவரோ என்னை பைத்தியக்கார நாய் என்றார். இன்னொருவர் என்னை பத்மாசூரன் என்று சொன்னார். வெளியுறவு மந்திரியாக இருந்த மற்றொரு தலைவர் என்னை குரங்கு என்று கூறினார்.

அவர்கள் என் தாயைக்கூட விட்டு வைக்கவில்லை. அவதூறான வார்த்தையை சொன்னார்கள். எனது தந்தை யார் என்று கேட்டனர். இதெல்லாம் நான் பிரதமர் ஆன பிறகு சொன்னதுதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில் அரியானாவில் நடந்த நில மோசடியை நினைவுபடுத்தினார். இது தொடர்பாக விசாரணையை சந்தித்து வரும் முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல் மோடி தாக்கினார்.

அப்போது அவர், “ விவசாயிகளின் நிலத்தை காங்கிரஸ் கட்சியினர் பறித்தனர். ஊழல் பயிரை அவர்கள் அறுவடை செய்தனர்” என சாடினார்.

அரியானாவிலும், டெல்லியிலும் ஆட்சியில் இருந்தபோது அடிமாட்டு விலைக்கு விவசாயிகளின் நிலத்தை காங்கிரஸ் பறித்ததாக குறிப்பிட்ட அவர், “உங்கள் ஆசியுடன், விவசாயிகளை கொள்ளையடித்தவர்களை இந்த காவலாளிதான் கோர்ட்டில் நிறுத்தி உள்ளேன். அவர்கள் ஜாமீனுக்காக ஓடுகிறார்கள்.

அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு செல்கிறார்கள். அவர்கள் தாங்கள் எல்லாரும் பேரரசர்கள், தங்கள் மீது யாரும் கை வைக்க முடியாது என நினைத்தனர். ஆனால் இப்போது அவர்கள் அதன் விளைவை உணர்கின்றனர்.

அவர்களை நான் சிறை வாயிலுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறேன். அவர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சிறையில் தள்ளுவதற்கு உங்கள் ஆசி நாடி நிற்கிறேன்” எனவும் கூறினார்.

தேசிய பாதுகாப்பு, ஊழல், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் என காங்கிரஸ் மீது சரமாரியாக மோடி குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

அதைத் தொடர்ந்து, “தற்போது நிலைமை தெளிவாகி விட்டது. மே 23-ந் தேதி மாலை தேர்தல் முடிவுகள் வெளிவரப்போகிறது. உங்கள் ஆசிகளுடன் மீண்டும் மோடி அரசுதான் வரப்போகிறது” என்றும் கூறினார். 

Advertisement

2
Leave a Reply

avatar
2 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
PatriotM. Babu Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
M. Babu
Guest
M. Babu

Congress is right. Obviously, they have good doctors with them

Patriot
Guest
Patriot

Congress is right. Obviously, they have good doctors with them.