தாம்பரத்தில் கொரோனா வகைப்படுத்தல் சிகிச்சை மையம் திறப்பு

464

சென்னையை அடுத்த தாம்பரத்தில் முதன்முறையாக கொரோனா வகைப்படுத்தல் சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி இந்த சிறப்புசிகி்ச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் கொரோனா வகைப்படுத்தல் சிகிச்சை  மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 500 படுக்கை வசதிகளுடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது என்று கூறினார். ஆம்புலன்ஸில் அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு இந்த வகைப்படுத்தல் மையத்தில் இ.சி.ஜி. உள்ளிட்ட 7 வகையான உடல்பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

இதற்காக மருத்துவர்கள்,செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் சோதனை முடிவுகளுக்கேற்ப நோயாளிகளை வகைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மக்கள் கொரோனா பரவலைக்கண்டு அச்சமடையத்தேவையில்லை என்றும் அனைத்துவகையான வசதிகளும் மருத்துவமனைகளில் தயார்நிலையில் உள்ளன என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement