“கால் வலிக்கும்ல” – நாற்காலியில் உட்கார வைத்து கொரோனா நிதி கொடுக்கும் ரேஷன் கடை..!

358

தேனி அல்லிநகரம் ரேஷன் கடையில் நுகர்வோர்கள் கால்வலிக்க நிற்பதைத் தவிர்க்க சேரில் அமர வைத்து நிவாரணத் தொகையும், இலவச குடிமைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது கரோனா ஊரடங்கினால் பலரும் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ.ஆயிரம் நிவாரண தொகையை அளித்து வருகிறது. இத்துடன் இம்மாதத்திற்கான ரேஷன்பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் 526 ரேஷன்கடைகள் உள்ளன. இதன் மூலம் 4லட்சத்து 6ஆயிரத்து 86 கார்டுதாரர்களுக்கு இவை வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றை நெரிசலின்றி வாங்கிக் கொள்ளும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி முன்தினமே 100பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. இதில் 50பேருக்கு காலையிலும், மீதம் உள்ளவர்களுக்கு மாலையிலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இலவசப் பொருட்களாக 15கிலோ புழுங்கல் அரிசி, 3 கிலோ பச்சரிசி, 2கிலோ கோதுமை, சீனி 2கிலோ, பருப்பு ஒருகிலோ, பாமாயில் ஒரு பாக்கெட் ஆகியவை வழங்கப்படுகிறது.

இதற்காக 3 இடைவெளியில் வரிசையாக நிற்கும் வகையில் வட்டமிட்டு சமூகஇடைவெளி வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையிலும் போலீஸ் பாதுகாப்புடன் பொருள் விநியோகம் நடைபெற்று வருகிறது.

தேனி அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கடன் சங்க கடையில் நுகர்வோர் வசதிக்காக வரிசையாக சேர்கள் போடப்பட்டன. பலரும் இதில் அமர்ந்து தங்கள் டோக்கன் எண் வந்ததும் நிதானமாக பொருட்களையும், பணத்தையும் வாங்கிச் சென்றனர்.

ஊழியர்கள் கூறுகையில், ரேஷன்கடைகளுக்கு வயதானவர்களே அதிகம் வருகின்றனர். பலருக்கு சர்க்கரை, ரத்தஅழுத்தம் உள்ளிட்ட நோய் உள்ளது. காத்திருப்பின் போது அவர்கள் உடல் நலம் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.

பல கடைகளிலும் வெயிலில் கால்வலிக்க நின்று பொருட்களை வாங்கி வரும் நிலையில் இங்கு செய்து தந்துள்ள வசதி நுகர்வோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of