நெல்லை கண்ணனுக்கு 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்

373

குடியுரிமை சட்ட திருத்தத்தை ஏதிர்த்தும், ஆதரவாகவும் நாடு முழுவதும் அவ்வப்போது போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் கடந்து டிசம்பர் 29ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பிரபல தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை கொலை செய்ய தூண்டும் வகையில் பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், நெல்லை கண்ணன் மீது மேலப்பாளையம் போலீசார் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் அறை எடுத்து தங்கியிருப்பது பெரம்பலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு சென்று நெல்லை கண்ணனை கைது செய்தனர். நெல்லை கண்ணனை இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். அங்கு நெல்லை கண்ணனின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிய பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மருத்துவ பரிசோதனை முடிந்தபிறகு நெல்லை கண்ணனை, நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 13ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.