ஒடிசாவை அச்சுறுத்திய தித்லி புயல் இன்று அதிகாலை 150 கிலே மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது

424
Cyclone Titli

ஒடிசாவை அச்சுறுத்தி வந்த டிட்லி புயல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கரையை கடந்தது. புயல் காரணமாக ஒடிசாவில்18 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான டிட்லி புயல், நேற்று அதி தீவிர புயலாக மாறியது. ஒடிசாவை நோக்கி வேகமாக நகர்ந்து வந்த இந்த புயல் இன்று அதிகாலை, ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும், ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. புயல் காரணமாக ஓடிசாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 18 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 15 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளை சேர்ந்த சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் மற்றும் கனமழை காரணமாக ஒடிசாவில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஆந்திராவிலும் 3 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.