தன்னுடைய முதலாளியை கடித்து கொன்ற சிங்கம்

405

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில் ஸ்லின் பிராந்தியத்தில் உள்ள ஸ்டிசோவ் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் பிராசெக் (வயது 33).இவர் தன்னுடைய வீட்டில் கூண்டுகள் அமைத்து 9 வயதான ஆண் சிங்கம் மற்றும் 2 வயதான பெண் சிங்கத்தை வளர்த்து வந்தார் . அதற்கான முறையான உரிமங்கள் எதையும் பெறவில்லை என கூறப்படுகிறது. இதற்காக அந்த கிராம நிர்வாகம் அவருக்கு ஏற்கனவே அபராதம் விதித்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மைக்கேல் பிராசெக் தன்னுடைய பெண் சிங்கத்துடன் நடை பயிற்சிக்கு சென்றபோது, அந்த வழியாக சைக்கிளில் சென்ற நபரை சிங்கம் தாக்கியது. இது அங்கு பெரும் பிரச்சினையானது.எனினும் செக் குடியரசின் சட்டப்படி, எந்த விலங்குகளையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது  என்பதால் அவை வேறு இடத்துக்கும் மாற்றப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல உணவுவைப்பதற்காக கூண்டுக்குள் சென்ற மைக்கேல் பிராசெக்கை ஆண் சிங்கம் கடித்து குதறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மைக்கேல் பிராசெக்கின் உடலை மீட்பதற்காக 2 சிங்கங்களையும் சுட்டுக்கொன்றனர்