அபாய நிலையில் காற்று மாசு – “தவிக்கும் தலைநகரம்” | Heavy Air Pollution

141

தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களாக காற்று மாசு அதிகமாக உள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று அதிகாலை, தீவிரம் என்ற அளவுக்கு சென்றது. இது தொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை 4 மணியளவில் 425 புள்ளிகளாக இருந்த காற்று மாசின் அளவு, இன்று காலை 6.40 மணியளவில் 457 புள்ளிகளாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது. கடந்த இரு நாட்களாக காற்று வீசும் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வயல்வெளிகளுக்கு தீவைக்கப்படுவதால் உருவாகும் புகை டெல்லிக்கு வரத்தொடங்கியதே, இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதனிடையே காற்று மாசினால் உலக அளவில் இறக்கும் மக்கள் தொகையில் மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் பேரில், 195 பேர் காற்று மாசினால் உயிரிழக்கின்றனர். காற்று மாசைக் கட்டுப்படுத்தினால் உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள மக்களின் சராசரி வயது தற்போது இருப்பதை விட 1.3 சதவீதம் முதல் 1.8 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

உலகில் மிகவும் மாசடைந்த 20 நகரங்கள் தரவரிசைப் பட்டியலில் 15 நகரங்கள் இந்தியாவில் தான் இருக்கின்றன. உலகிலேயே மிகவும் மாசடைந்த தலைநகரமாக டெல்லி இருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.