பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்

102

பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் வரலாறு காணாத வகையில் வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாஜித் ஷா கூறியதாவது:-

பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமார் 27,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகப்படியான டெங்கு காய்ச்சல் பரவலை பாகிஸ்தான் தற்போது எதிர் கொண்டுள்ளது.

அதே சமயம் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2011-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 370 பேர் உயிரிழந்தனர். ஆனால் நடப்பாண்டில் இதுவரை 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

டெங்குவை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.