டெங்கு காய்ச்சல் பாதிப்பு..! 20 சதவீதம்..! சிறப்பு மருத்துவர் கொடுத்த அதிர்ச்சி..!

727

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தான் வருகிறது. இருப்பினும், இதற்கு பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களின் எண்ணிக்கை தான் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவர் ஸ்ரீனிவாசன் சத்தியம் டிவிக்கு பிரத்யேகமாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நாள்தோறும் 200 குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதில் நேற்று மட்டும் 30 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு சிறப்பான சிகிச்சை வழங்கபட்டு வருவதாக கூறினார். டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வருவதால், இறப்புகளை தடுக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

எனவே காய்ச்சல் வந்த உடனேயே மருத்துவமனையை அணுக வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காய்ச்சலால் சிகிச்சைக்கு வரும் 20 சதவீத குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement