டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழப்பு

598

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த கோதண்டம்-நதியா தம்பதியின் 8 வயது மகன் ஆகாஷ், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான்.

இச்சிறுவனுக்கு கடந்த 29ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

ஆனால், 3 நாட்களாகியும் காய்ச்சல் குறையாததால், சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அங்கும் உடல்நிலை சீராகாத நிலையில், இன்று காலை ஆகாஷ் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்தால், ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே, அயப்பாக்கம் ஊராட்சியில், ஆங்காங்கே குப்பைகள் கொட்டி கிடப்பதும், சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதுமே டெங்கு பரவ காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement