“பொங்கல் பரிசாக மாம்பழம் கொடுத்தோம்” – திண்டுக்கல் சீனிவாசனின் அடுத்த உளறல்

1153

தமிழகத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும், தவறான தகவல்களையும் உளறுபவர்களில் முக்கியமான இடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு உண்டு. அந்த வகையில் தற்போது பொங்கல் பரிசாக மாம்பழம் கொடுத்தோம் என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம், தேர்தலில் பணம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது, பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங், டெல்லி சென்று நரசிமராவுடன் துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுவார், பாரத பிரதமர் எம்ஜிஆர், மின்கம்பங்களை விமானம் மூலம் நட வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசனின் உளறல்களை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.

அந்த வகையில் லேட்டஸ்ட்டாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்த திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம் போல உளறியுள்ளார்.

பிரச்சார கூட்டத்தில் பேசிய அமைச்சர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், பொங்கல் பண்டிகையின் போதெல்லாம் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தோம். பச்சரிசி, மாம்பழம் கொடுத்தோம் என்று உளறினார். வெல்லம் கொடுத்தோம் என சொல்வதற்கு பதிலாக மாம்பழம் கொடுத்தோம் என தவறாக பேசினார் சீனிவாசன்.

இதனால் பிரச்சார கூட்டத்திற்கு வந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. பின்னர் சுதாரித்த அமைச்சர் பச்சரிசி, வெல்லம் கொடுத்தோம் என்றார்.

கடந்த மாதம் பிரச்சார கூட்டம் ஒன்றில் பாமகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்கும் போது, மாம்பழத்திற்கு ஓட்டு போடுங்க என சொல்வதற்கு பதில் ஆப்பிள் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க என மாற்றி கூறி சலசலப்பை ஏற்படுத்தினார் திண்டுக்கல் சீனிவாசன்.

தற்போது ஜெயலலிதா ஆட்சியில் மாம்பழம் கொடுத்தோம் என உளறி கொட்டியுள்ளார். அமைச்சர் இன்னும் மாம்பழத்திற்கு வாக்கு கேட்ட நினைவிலிருந்து மீளவில்லை போலும் என கூட்டத்திற்கு வந்தவர்கள் வேடிக்கையாக கமெண்ட் அடித்து சென்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of