பிச்சை கேட்டபோது வாக்குவாதம்.., தொழிலாளி பலி.., பிச்சைக்காரர்கள் கைது

160

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 65). இவர் சுமை தூக்கும் தொழிலை செய்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கம்பத்தில் வேலையை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்ப புதிய பஸ் நிலையம் நோக்கி வந்தார்.

அப்போது நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த அந்தோணி(47), மதுரை செல்லூரை சேர்ந்த சித்திக்(29) ஆகிய 2 பேரும் பஸ் நிலைய பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். இவர்கள் காளிமுத்துவிடம் பிச்சை கேட்டனர்.அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது உச்சத்தை அடைந்து கைகலப்பாக மாறியது. இதில் காளிமுத்துவை 2 பேரும் சேர்ந்து கீழே தள்ளி விட்டனர். அப்போது பஸ்நிலையம் நோக்கி வந்த அரசு பஸ்சின் பின்சக்கரத்தில் காளிமுத்து சிக்கிக்கொண்டார்.

இதில் அவர் மீது பஸ் சக்கரம் ஏறி, இறங்கியது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது காளிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைக்காரர்கள் அந்தோணி, சித்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.