தீபாவளி – தலைவர்கள் வாழ்த்து

1855

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், நாடு முழுவதும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் விழா தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீபாவளி பண்டிகை அனைவரது வாழ்விலும், மகிழ்ச்சியையும், ஒளியையும் ஏற்படுத்தட்டும் என்று ஆளுநர் தனது வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், தமிழக மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும், வளம் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், தீபஒளி என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கொண்டாடப்படுவதாக இருக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளி நிறைந்த நாளாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும் என்று கூறியுள்ள அவர், அத்தகைய இலக்கை நோக்கி செல்ல தமிழக மக்கள் அனைவரும் ஒளி நிறைந்த இந்நன்னாளில் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், தீபாவளி திருநாள் உலகில் இருந்து தீய செயல்களை போக்கி, நற்செயல்களை நிலைநாட்டுவதை அடிப்படையாக கொண்டுள்ளதால், உலகெங்கும் வாழும் மக்கள் பலராலும் இத்திருநாள் ஜாதி மத பேதமின்றி கொண்டாடப்படுவதாக தெரிவித்துள்ளார். மனங்களிலும், வாழ்விலும் ஒளிவீசி மகிழ்வோடு வாழ, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அநீதி அழிந்து, நீதி தழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பலரும் தமிழக மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement