ஒன்றிய, ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு பேரம் பேசும் கட்சிகள்.. பரபரக்கும் திமுக-அதிமுக..!

393

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஒன்றிய குழுத் தலைவர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜன., 11ம் தேதி நடக்க உள்ளது.

அப்பதவிகளை கைப்பற்ற ஆள்பிடிப்பு மற்றும் குதிரை பேரத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சியினர் மும்முரமாக இறங்கி உள்ளனர். தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது.

ஓட்டு எண்ணிக்கை 2ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. தேர்தல் நடந்த 27 மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி 240; தி.மு.க. கூட்டணி 271 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5090 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி 2199; தி.மு.க.கூட்டணி 2356 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மற்ற கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 512 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் நாளை பதவியேற்க உள்ளனர்.

அதைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்; ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக ஜன., 11ம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.

மாவட்ட ஊராட்சிகளை பொறுத்தவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலா 13 மாவட்டங்களை கைப்பற்றி உள்ளன. இம்மாவட்டங்களில் இரு கட்சிகளும் தலைவர், மற்றும் துணை தலைவர் பதவியை பெறுவதில் சிக்கல் இல்லை.

சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் 16 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.

ஆறு இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்., இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக அங்கு தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்ற இரு கூட்டணியிலும் போட்டி எழுந்துள்ளது. ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. – தி.மு.க.

தலா 135 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் பெறுவது உறுதியாகி உள்ளது. இரண்டு ஒன்றியங்களில் அ.ம.மு.க.வுக்கு தலைவர், துணை தலைவர் பதவி கிடைக்க உள்ளது.

மீதமுள்ள 42 ஊராட்சி ஒன்றியங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது. உதாரணத்திற்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ௧௦ வார்டுகள் உள்ளன.

இதில் பா.ஜ. ஐந்து வார்டுகளிலும் தி.மு.க. ஒரு வார்டிலும் காங்கிரஸ் நான்கு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு தலைவர், துணை தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. ஆறு வார்டுகளிலும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தி.மு.க. எட்டு இடங்களிலும் அ.ம.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு அ.ம.மு.க.

ஆதரவை பெறுபவரே தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை பெறும் நிலை உள்ளது. இதுபோன்று ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன.

சுயேச்சை வேட்பாளர்களை இழுக்க பேரமும் நடக்கிறது. அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கவுன்சிலர்கள் முகாம் மாறி விடக்கூடாது என்பதற்காக அவர்களை கவனிக்கும் பணியையும் துவக்கி உள்ளனர். இது சுயேச்சை மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of