“திமுக கூட்டணி தர்மத்தை பேணவில்லை” – கே.எஸ்.அழகிரியின் பரபரப்பு அறிக்கை குறித்து ப.சிதம்பரம் கருத்து..!

968

கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தையே காங்கிரஸ் அறிக்கை காட்டியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்து விட்டது. இதற்கான தேர்தல் முடிவுகள் கடந்த 2-ஆம் தேதி வெளியானது.

மொத்தம் 91 ஆயிரம் இடங்களில் நடந்த தேர்தலில் திமுகவும் அதிமுகவும் கணிசமான இடங்களை பெற்றன. இந்த நிலையில் இன்று ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் சார்பில் திமுகவை மீது குற்றம்சாட்டி ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி கூட வழங்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

மேலும் மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஊராட்சி தலைவர் பதவியோ, துணை தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்படுகிறது. 303 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டுமே திமுகவினரால் வழங்கப்பட்டது என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறுகையில், கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை காங்கிரஸ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே தவிர இது மிரட்டல் அல்ல. 2021 சட்டசபை தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். காங்கிரஸுக்கான இடங்களை திமுக வழங்கும் என நம்புகிறேன் என ப சிதம்பரம் தெரிவித்தார்.

Advertisement