பொள்ளாச்சி பாணியில் இன்னொரு சம்பவம் – கண்ணீர் விடும் திமுக பிரமுகர்

532

பொள்ளாச்சி சம்பவத்தைப் போல ஆவடி நகராட்சியின் முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முன்னாள் கவுன்சிலரின் கணவர் கண்ணீர்மல்க தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த ஆவடி நகராட்சியில் உள்ள வார்டு ஒன்றில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் கவுன்சிலரின் கணவர் நம்மைச் சந்தித்து பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஆவடி அருகே உள்ள பகுதியில் நான் குடும்பத்தோடு குடியிருந்தேன். என்னுடைய அண்ணன்தான் தி.மு.க.வின் வட்டச் செயலாளராக இருந்தார்.

நான் பொருளாளராக இருக்கிறேன். அண்ணன் கவுன்சிலராக இருந்தார். இந்தச்சமயத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது எங்கள் வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் தி.மு.க. சார்பில் என் மனைவி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதல் முறையாக அவர் கவுன்சிலரானார். இந்தச்சமயத்தில் 2017-ம் ஆண்டு ஆவடியில் நடந்த மாநாட்டுக்கு திருநின்றவூரிலிருந்து வந்த டிரைவருடன் என் மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் போனில் பேசினர். இந்தச்சமயத்தில் 9.8.2017 அன்று எங்கள் வீட்டின் அருகில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியை என் மனைவி தன்னுடைய செல்போனில் போட்டோ எடுத்தார்.

அப்போது பட்டாபிராமைச் சேர்ந்த ஒருவர் என் மனைவியிடம் நிகழ்ச்சியின் போட்டோ வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே என் மனைவி தன்னுடைய செல்போனை அவரிடம் கொடுத்துள்ளார். செல்போனில் உள்ள போட்டோவை எடுத்த அந்தநபர், என் மனைவியும் திருநின்றவூரைச் சேர்ந்த டிரைவரும் பேசிய ஆடியோவை டவுன்லோடு செய்துள்ளார்.

இந்த நிலையில், இந்த ஆடியோ சில மாதங்களுக்கு முன் ஆவடி நகராட்சியில் உள்ள கட்சியினருக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து தகவல் எனக்கு தெரியவந்ததும் என் மனைவியிடம் விவரம் கேட்டேன். அதன்பிறகுதான் திருநின்றவூரைச் சேர்ந்தவருடன் என் மனைவிக்கு பழக்கம் இருந்த தகவல் எனக்குத் தெரியவந்தது. இதையடுத்து, பட்டாபிராம் காவல் நிலையத்தில் என் மனைவி புகார் கொடுத்தார். மனு ஏற்பு சான்றிதழ் மட்டும் கொடுத்தனர்.

அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தேன். அங்கும் ஆடியோவை அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் என் மனைவியிடம் ஆடியோவை வெளியிடுவதாகக் கூறி நகராட்சியில் பணியாற்றும் அந்தநபர் என்னிடமிருந்து பணத்தைப் பறித்தார். தற்போது மீண்டும் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஆடியோவை புதிய நம்பரிலிருந்து வெளியிட்டுள்ளார்” என்றார் கண்ணீருடன்.

இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜாமணி கூறுகையில், “பொள்ளாச்சி சம்பவம் பரபரப்பாக பேசப்படும் சூழலில் ஆவடியில் அதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் பெண் கவுன்சிலரின் ஆடியோவை வெளியிட்ட நபரின் அப்பா தி.மு.க.வைச் சேர்ந்தவர். அவர், நகராட்சியில் பணியாற்றிவருகிறார்.

அவருடைய மகனின் செல்போன் நம்பரிலிருந்துதான் ஆடியோ அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நாங்கள் காவல் நிலையத்தில் கூறியபோது, சம்பந்தப்பட்டவரின் செல்போன் ஆடியோ அனுப்புவதற்கு முன் தொலைந்துவிட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். சில நாளுக்கு முன், புதிய நம்பரிலிருந்து மீண்டும் அதே ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த நம்பர் யாருடையது என்பதை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும்” என்றார்.

காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “முன்னாள் பெண் கவுன்சிலர் 9.5.2018-ல் புகார் கொடுத்தார். ஆனால், அவர் குற்றம் சுமத்தியவரின் செல்போன் 18.3.2018ல் தொலைந்துவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விசாரணை நடத்தினோம்.

இதற்கிடையில் இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் என கவுன்சிலரின் குடும்பத்தினர் கருதினர். இதனால் புகார் மனு கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் ஆடியோ புதிய நம்பரிலிருந்து வெளியானது தொடர்பான புகார் எதுவும் எங்களுக்கு வரவில்லை. பெண் கவுன்சிலர் தரப்பில் மீண்டும் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பெயரைக் குறிப்பிட விரும்பாத ஆவடி நகர பகுதியைச் சேர்ந்த ஒருவர், “முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவருடன் பேசும் ஆடியோ தொடர்ந்து வாட்ஸ்அப்பில் வெளியாகி வந்தவண்ணம் உள்ளன.

அந்த ஆடியோவைக் கேட்டால் நீண்ட நாள் நட்பாக இருந்தவர்கள் பேசுவது போல தெரிகிறது. சில பெர்ஷனல் விஷயங்களும் ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோவைப் பயன்படுத்தி முன்னாள் பெண் கவுன்சிலரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் ஒரு கும்பல் வைத்துள்ளது. ஏற்கெனவே பட்டாபிராமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட டார்ச்சர் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஆடியோ வெளியான பிறகு முன்னாள் பெண் கவுன்சிலர் குடும்பத்தின் நிம்மதி பறிபோய்விட்டது. இரண்டு குழந்தைகளுக்காக பெண் கவுன்சிலரின் கணவர் அமைதியாக இருக்கிறார். தற்போது அவர் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு இடத்துக்குச் சென்றுவிட்டார்.

அதன்பிறகும் முன்னாள் பெண் கவுன்சிலர் குடும்பத்தை பணம் கேட்டு அந்தக் கும்பல் துரத்துகிறது. தி.மு.க. தரப்பிலிருந்து எந்தவித ஆதரவும் பெண் கவுன்சிலருக்கு கிடைக்கவில்லை. இதனால் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரின் உதவியை முன்னாள் பெண் கவுன்சிலரின் குடும்பம் நாடியுள்ளது.

அவரும் சில குறிப்பிட்ட தொகையை வாங்கி ஏமாற்றியிருக்கிறார். மீண்டும் மீண்டும் ஆடியோ வெளியிட்டு பணம் கேட்டு மிரட்டப்படுவதால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் முன்னாள் பெண் கவுன்சிலரின் குடும்பம் உள்ளது” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of