பொள்ளாச்சி தொகுதியில் 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக வெற்றி

410

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம், அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை விட 1,75,883 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் , கிணத்துக்கடவு ,தொண்டாமுத்தூர், வால்பாறை (தனி) ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் 15,20,276 வாக்காளர்கள் உள்ளனர். தற்போதைய தேர்தலில் அதிமுக சார்பில் சி. மகேந்திரன், திமுக சார்பில் கு. சண்முகசுந்தரம், அமமுக சார்பில் எஸ். முத்துக்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர். மூகாம்பிகா, நாம் தமிழர் கட்சி சார்பில் யு.சனுஜா, பகுஜன் சமாஜ் சார்பில் ஏ .கணேசமூர்த்தி உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.

இதில் 6 பேர் கட்சி சார்பிலும், 8 பேர் சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 10,77,420 வாக்குகள் (70.87 சதவீதம்) பதிவாகியிருந்தன. இத்தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணி, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன.

இதில் அதிமுக வேட்பாளர் சி. மகேந்திரன் 801 வாக்குகளும், திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் 3,325 வாக்குகளும் பெற்றிருந்தனர். மொத்தம் 4,999 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை முடிவில் கு.சண்முகசுந்தரம் 5,54,230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இத்தொகுதியில் கடந்த 1980 -இல் சி.டி.தண்டபாணி திமுக சார்பில் வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 39 ஆண்டுகளாக திமுக வெற்றி பெறவில்லை. தற்போது திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் வெற்றி பெற்றுள்ளது கொங்கு மண்டலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.

உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுகவுக்கு அதிக வாக்குகளை பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது: திமுக மீதும், திமுக தேர்தல் அறிக்கை மீதும் நம்பிக்கை வைத்து மக்கள் என்னை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார். அதிமுக வேட்பாளர் சி .மகேந்திரன் 3,78,347 வாக்குகள் பெற்று இரண்டாமிடமும், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மூகாம்பிகா 59,693 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா 31,483 வாக்குகள் பெற்று நான்காம் இடமும், அமமுக வேட்பாளர் எஸ்.முத்துக்குமார் 26,663 வாக்குகள் பெற்று ஐந்தாம் இடமும் பெற்றனர். நோட்டாவுக்கு 15,110 பேர் வாக்களித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of