இளைஞரணியில் மாற்றம்..? உதயநிதியின் அடுத்த டார்கெட்…பரபரக்கும் திமுக வட்டாரம்..!

242

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக கட்சி மகத்தான வெற்றியை சந்தித்தது. இந்த தேர்தலில் முதல்முறை திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

பல மாவட்டங்களில் அவர் கிராம சபை கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசினார். அவரின் பிரச்சாரம் திமுகவிற்கு பெரிய அளவில் கைகொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அவருக்கு மக்கள் செல்வாக்கும் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மொத்தமாக இளைஞரணியை கட்டுப்படுத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

ஆனால் திமுக இளைஞரணியில் பல மூத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதனால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் சில அதிருப்தி உறுப்பினர்களை சந்தித்து ஏற்கனவே சமாதானம் செய்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞரணியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார் என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடக்கிறது. காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

திமுக இளைஞரணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்யும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. உள்ளாட்சி மன்ற தேர்தலில் இளைஞரணியில் இருந்து பலருக்கு வாய்ப்பு அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது. அது தொடார்பாக இன்று ஆலோசிக்கப்படும், திமுக இளைஞரணியில் முக்கிய மாற்றங்கள் இன்று செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.