ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க கூடாது

1014

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க கூடாது – மீறினால் மக்களை திரட்டி விரட்டி அடிப்போம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால், , மக்களை திரட்டி போராடி விரட்டி அடிப்போம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான மற்றொரு ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கரவாசல் முதல் நாகை மாவட்டம் காரியப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கிலோ மீட்டர் அளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், தமிழகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க கூடாது என்றும் அப்படி அனுமதித்தால் மக்களை திரட்டி போராடி, அத்திட்டத்தை விரட்டி அடிப்போம் என்று தெரிவித்தார். பொங்கல் பரிசு தொகையாக அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்த அவர், அந்த பணத்தை வைத்து கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என்றார்.