8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது

727

சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது என்று, காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை – சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலத்தில்,8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்திய 10-க்கும் மேற்பட்டவர்களை, காவல்துறையினர் கைது செய்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், இத்திட்டத்திற்கு எதிராக அமைதியாக, ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க கூடாது என உத்தரவிட்டனர்.

மேலும், உண்மையாக போராடுபவர்கள் யார், சட்டம் – ஒழுங்கு பாதிப்படையும் வகையில் போராடுபவர்கள் யார் என்கிற வித்தியாசத்தை காவல்துறையினர் அறிய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement