2 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது

523

2 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என்று பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் தரக் கூடாது என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால் இதை பல பள்ளிகள் கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து அனைத்துப் பள்ளிகளும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான “ஸ்கூல் பேக்” எடை குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவையும் பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளும் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழான பாடப்புத்தகங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும், வேறு பாடப் புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.