குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

458

குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை என்று புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த செந்தில் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காலாப்பேட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதில் குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகள் முறையாக பினபற்றாமலும், அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை முறையாக பரிசீலிக்காமலும் உள்ள நிலையில், அறிவுரை குழுமம் காலதாமதமாகவே குண்டர் சட்டத்தில் கைதை உறுதி செய்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், செந்தில் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர். சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்றும் ஆனால் சட்டத்தை பிரயோகிக்கும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சமூக விரோதிகள் எளிதில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்காமல் இருக்க சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் சரியாக கடைபிடிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.