சார் வேண்டாம்.., ராகுல் போதும்.., கலந்துரையாடலில் கலக்கிய ராகுல்

249

தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக இன்று சென்னை வந்த ராகுல்காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலக்கினார்.

எப்போதும் முகத்தில் தாடியுடன் காணப்படும் ராகுல் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தி நடிகர் போல தாடி, மீசையை எடுத்து பளிச்சென்று காணப்பட்டார்.எப்போதும் குர்தா உடையுடன் காட்சி அளிக்கும் ராகுல் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி இருந்தார். டீ-சர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்த ராகுல், மாணவிகளின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார்.

நிகழ்ச்சி தொடங்கியதும் மாணவி ஒருவர், ‘சார்’ என்று தனது கேள்வியை தொடுத்தார். உடனே இடைமறித்த ராகுல், “என்னை சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் என்றே கூப்பிடுங்கள்” என்றார்.இதைக்கேட்டு அந்த மாணவி சிறிது நேரம் பேசாமல் மவுனம் காத்தார். இதன் பின்னர் லேசான தயக்கத்துடனேயே ‘ஹாய் ராகுல்’ என்று கூறினார். இதை கேட்டதும் அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது. ராகுல் உள்ளிட்ட அனைவருமே மனம் விட்டு சிரித்தனர். மாணவிகள் அனைவரும் கரகோ‌ஷங்களையும் எழுப்பினார்கள்.

மாணவிகளுடனான கலந்துரையாடலின்போது ராகுலிடம் அவரை பற்றியும், அரசியல் பற்றியும் பல்வேறு கேள்விகளை மாணவிகள் எழுப்பினார்கள். இதற்கு நிதானமாக யோசித்து பதில் அளித்த ராகுல் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.