”முஸ்லிம் மக்களை சந்தேக கண்ணோடு பார்க்கவேண்டாம்” – இலங்கை ஜனாதிபதி வேண்டுகோள்

939

இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மாத்திரமன்றி, புலனாய்வு பிரிவிலும் மறுசீரமைப்பை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு பிரிவின் தலைவர்களை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கை புலனாய்வு பிரிவிற்கு வழங்கப்பட்ட உளவுத் தகவல்கள் குறித்த பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியமை தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை தான் வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

1980ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் சிங்கள மக்கள், தமிழர்களை சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்த்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் பின்னரான காலப் பகுதியில் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் கிடையாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மைத்திரிபால சிறிசேன
அதேபோன்று, அனைத்து முஸ்லிம் மக்களையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என ஜனாதிபதி, தமிழர் மற்றும் சிங்கள மக்களிடம் பகிரங்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து சமூக மக்களும் பயங்கரவாதிகள் கிடையாது என குறிப்பிட்ட அவர், ஒரு சிலரே இனவாத ரீதியில் செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, நாட்டை அமைதி பாதைக்கு கொண்டு செல்லும் நோக்குடனேயே அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சட்ட அமுலாக்கத்தின் ஊடாக போலீஸார் மற்றும் ராணுவத்தினர் ஆகியோருக்கு சுயமாக செயற்பட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கப்படாது என அவர் கூறியுள்ளார்.

இந்த பயங்கரவாத அமைப்பு தொடர்பில் 2017ஆம் ஆண்டு முதல் தகவல்கள் தமக்கு கிடைத்திருந்த போதிலும், அவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன்நிறுத்தும் அளவிற்கான சாட்சியங்கள் தம்வசம் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of