தேர்தல் பிரச்சாரத்துக்காக இராணுவ உடையை பயன்படுத்தக்கூடாது – அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கண்டிஷன்

216

தேர்தல் பிரச்சாரத்துக்கு ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணைய செயலாளர் பிரமோத் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணைய செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதில், ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரச்சாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும், இது தொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் ராணுவத்தினரின் புகைப்படங்களை தங்கள் தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் பயன்படுத்துவதாக ராணுவ அமைச்சகம் தேர்தல் ஆணைய கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும், இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது.