சபரிமலை விவகாரத்தை அரசியல் பிரச்சாரமாக்கக்கூடாது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

119

தேர்தல் பிரசாரத்தின் போது சபரிமலை அய்யப்பனின் பெயரால் மத பிரசாரம் செய்யக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த ஆளும் இடதுசாரி முன்னணி அரசு மும்முரமாக இருந்த நிலையில், அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

இந்த பிரச்சினை தற்போது அடங்கி இருக்கும் நிலையில், சபரிமலை விவகாரத்தை நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த மாநில கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டிவிடுவது அல்லது மதத்தின் பெயரால் ஓட்டு சேகரிப்பது போன்றவை தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.

குறிப்பாக சபரிமலை அய்யப்பனின் பெயரால் மத பிரசாரம் மேற்கொள்வது தெளிவான விதிமீறல் ஆகும். எனவே இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீகா ராம் மீனா கூறினார்.