டெல்லியில் அரசு சேவைகள் வீடு தேடி வரும் திட்டம் துவக்கம் – அரவிந்த் கெஜ்ரிவால்

939

திருமண பதிவுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகையான சேவைகளை மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டது.

இத்திட்டத்திற்கு , மத்திய பாஜக அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளை மீறி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திட்டத்தை நேற்று தொடக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி பொதுமக்கள் 1076 என்ற தொலைபேசி எண்னை அழைத்து தங்களுக்கு வேண்டிய சேவைகளைக் குறிப்பிட்டால், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘மொபைல் ஸஹாயக்’ என்னும் நடமாடும் வாகனங்கள் மூலம் சேவைகள் அவர்களது வீடு தேடி வரும்.

இந்த சேவைகளுக்கு அவர்கள் 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் கெஜ்ரிவால், இனி பொதுமக்கள் அரசு சேவைகளுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை என்றும் அரசு சேவைகள் உங்களைத் தேடி உங்கள் வீட்டு வாசலுக்கே வருகிறது என தெரிவித்தார். அரசு சேவைகள் பொதுமக்கள் இல்லம் தேடி வருவது நாட்டிலேயே இதுதான் முதன்முறை என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement