நடிகர் ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு – போலீஸ் குவிப்பு..!

327

நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவதற்காக சென்னை கதீட்ரல் சாலை செம்மொழி பூங்கா அருகில் நேற்று திராவிடர் விடுதலை கழகத்தினர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 14-ம் தேதி நடந்த ‘துக்ளக்’ இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ல் சேலத்தில் நடந்த தி.க. ஊர்வலம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். பெரியாரைப் பற்றி அவர்பேசிய கருத்துக்கு திமுக, அதிமுக, தி.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

ரஜினியின் கருத்துக்கு பெரியாரிய இயக்கங்கள், பெரியார் ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரஜினியின் வீட்டை முற்றுகையிட வாய்ப்பு உள்ளதாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு உளவுப் பிரிவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, தியாகராய நகர் துணை ஆணையர் அசோக்குமார் மேற்பார்வையில்50-க்கும் மேற்பட்ட போலீஸார் ரஜினி வீட்டு முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரோந்து போலீஸாரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் ஒரு வழக்கு தாக்கல்

பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திராவிடர் விடுதலைக்கழக கோவை மாவட்டத் தலைவரான நேருதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கெனவே திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளரான உமாபதியும், ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய, திருவல்லிக்கேணி போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement