அதிகாரம் இல்லாத நாடாளுமன்றத்திற்கு தேர்தல் ?

327
kimun11.3.19

கிம் ஜாங் அன் இவர் தான் வடகொரியாவின் தற்போதைய தலைவர். இவரின் வம்சத்தினர்தான் அந்நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நாட்டு மக்கள் விசுவாசமாக இருப்பது கட்டாயமாகும்.

அரசையும், ராணுவத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவரே நாட்டுக்கு தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பார். அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது.

தலைவரால் வரைவு செய்யப்படும் சட்டங்களுக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒப்புதல் வழங்குவது மட்டுமே அதன் ஒரே பணி. இந்நிலையில் வடகொரியாவின் நாடாளுமன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கிம், பியாங்காங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிகாலம் முடிவடைந்ததையொட்டி நேற்று அங்கு தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. கிம் ஜாங் அன், பியாங்காங் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார்.

வடகொரியாவை பொறுத்தவரை மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படுகிறது. அதாவது 35 ஆயிரம் மக்களுக்கு ஒரு பிரதிநிதி தேர்வு செய்யப்பட்டு அவர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படுகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 687 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு சுமார் 700 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ஆச்சரியம் என்னவென்றால் ஒரு தொகுதிக்கு ஒரே ஒரு வேட்பாளர்தான் நிறுத்தப்படுவார். ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்படுவதால் அவரை அங்கீகரித்து, அவருக்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியே கிடையாது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of