கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கிரண்பேடி அனைத்து துறை செயலாளர்களுடன் அவசர ஆலோசனை

462

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனைத்து துறை செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு அரசு துறை செயலர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து 4 மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனைத்து துறை அதிகாரிகளுடன் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் கனமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து அதிகாரிகளுக்கு ஆளுநர் கிரண்பேடி ஆலோசனை வழங்கினார். மேலும் மழை பாதிப்புகளை உடனுக்குடன் கையாலும் வகையில், அரசு செயலாளர்கள் தலைமையில் பல்வேறு குழுக்களை அமைத்து உத்தரவிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி உள்ளாட்சித்துறை செயலாளர் ஜவஹர், கனமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் 700 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.