தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதனத்திற்கு துணை நின்றார்கள் – திருமாவளவன்

1534

மன்னர் ராஜராஜசோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி எம்.பி யுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பனந்தாளில் நடைபெற்ற நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் உமர்பாரூக் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன் காலத்தில் தான் பட்டியலின மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், அக்காலத்திலேயே தேவரடியார்கள் முறை வழக்கத்திலிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ரஞ்சித்தின் மேற்கண்ட கருத்துக்களுக்கு குறிப்பிட்ட சில தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு எதிராக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே சமயம், தாம் வரலாற்றுத் தரவுகளின் படியே ராஜராஜசோழன் குறித்து பேசியிருந்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், “ராஜராஜா சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள்” என மேற்கண்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவன்.

மேலும், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்” எனவும் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

Advertisement