கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி

460

கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றும், ஆனால் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்பதை அவை தெரிவிப்பதாகவும் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற இந்தி படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதை தெரிவித்து உள்ளன. சில கருத்துக்கணிப்புகள் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் தனது பணிகளை சிறப்பாக செய்து இருக் கிறார். அதைத்தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைய மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றபோதிலும் இந்த கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவை எதிரொலிப்பதாக அமைந்து உள்ளன. எனவே மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் புதிய அரசு அமையும்.

மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த இடங்கள் (43) இப்போதும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

பேட்டியின் போது அவரிடம், பிரதமர் பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இந்த கேள்விக்கு நான் கிட்டத்தட்ட 50 தடவை பதில் அளித்து விட்டேன்.

பிரதமர் மோடி தலைமையில்தான் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். எனவே அவரது தலைமையில்தான் பாரதீய ஜனதா அரசு அமையும்” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of