கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – அபாய எச்சரிக்கை

182

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 53 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான, கேரளா மாநிலம் வயநாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 73 ஆயிரத்து 111 கன அடியும், நுகு அணையில் இருந்து 9 ஆயிரத்து 442 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.

இதனால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 642 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் வேகமாக ஓடுகிறது. குறிப்பாக பிரதான அருவி தண்ணீரில் மூழ்கி உள்ளது.

ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதால் காவிரிக்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement