“உஷாரய்யா…., உஷாரு…,!” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!

1394

பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் டிரெண்ட் ஆகி வரும் ஒரு சேலஞ்ச் என்றால், அது பேஸ் ஆப் சேலஞ்ச் தான். பேஸ் ஆப் என்ற செயலியின் மூலம் அனைவரும் தங்களது புகைப்படங்களை மாற்றி பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த செயலி உங்களின் தகவல்களை திருடுகிறது என்றால் நம்பமுடிகிறதா? இது குறித்த ஓர் எச்சரிக்கை செய்தியை தற்போது பார்கலாம்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் புகைப்படங்கள் வயதான தோற்றமாகவே தென்படுகின்றன…. ஆம் ஃபேஸ் ஆப் மூலம் பலரும் வயதான தோற்றத்தில் மாற்றி பகிர்ந்து வருகின்றனர். பெண்கள், ஆண்கள் என அனைவருடைய முகப்பு படங்களும் பெரும்பாலும் இவ்வாறு தான் இருக்கின்றது.

இதில் பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்களின் புகைப்படங்களை இந்த செயலியில் மாற்றி பகிர்ந்து வருகின்றனர். இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாக மாறி பலத்த வரவேற்புகள் குவிந்து வருகின்றன.

ஆனால் இதற்கு பின்னால் உங்களின் தகவல்கள் திருடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் ஃபேஸ் ஆப் பயன்படுத்துவது உங்கள் பிரைவசிக்கு பெரும் ஆபத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ் ஆப் பயன்படுத்தினால் உங்கள் கேலரியில் உள்ள புகைப்படங்களை அந்நிறுவனம் அபகரித்துக்கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இது முதல்முறை இல்லை என்றும் 2017ம் ஆண்டே இதே மாதிரியான குற்றச்சாட்டு ஃபேஸ் ஆப் நிறுவனம் மீது வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய நிறுவனம் தயாரித்த ஃபேஸ் ஆப் மூன்றாம் தர செயலிகள் மூலம் உங்களது புகைப்படங்களை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பேஸ்புக் போன்ற அதிகமானோர் பயன்படுத்தும் செயலிகளே பிரைவசி விஷயத்தில் தோற்றுப்போன நிலையில் ஃபேஸ் ஆப்பை நம்புவது கடினம் தான் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே இது போன்ற செயலிகளை பயன்படுத்தும் போது கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்…