நான் முல்லைப் பெரியாறு அணை பேசுகிறேன்

1993

கேரளாவில் வந்த வெள்ளத்திற்கு, தமிழகம் முல்லைப்பெரியாறு அணையை திறந்துவிட்டதே காரணம் என குற்றம்சாட்டியுள்ளது கேரளா. ஆனால் இந்த குற்றச்சாட்டில் பல்வேறு அரசியல் விளையாட்டு இருக்கிறது என்பதை உண்மையை அறிந்த யாராலும் மறுக்க முடியாது.

இந்த சூழலில் முல்லைப்பெரியாறு அணையின் பயன் என்ன? எதற்காக முல்லைப்பெரியாறு அணையை வைத்து கேரளா அரசியல் செய்கிறது என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு….

நான் முல்லைப் பெரியாறு அணை. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நான் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளேன். கேரளாவுக்கு உரிமையான இடத்தில் அமைந்துள்ள என்னை தமிழக பொதுப்பணித்துறைதான் கவனித்து வருகிறது.

155 அடி உயரம் உள்ள நான் 15.5 டிஎம்சி கொள்ளளவை கொண்டுள்ளேன்.

பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட நான், முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து முல்லைப் பெரியாறு அணை என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.

பெரியாற்றின் தண்ணீர் என் மூலம் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டு 140 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

என் மூலம் கிடைக்கும் நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள 2 லட்சத்திற்கு அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாய் விளங்குகிறேன்.

அதே சமயம் முல்லை பெரியாறு அணைக்கு, அதான் எனக்கு கீழே இருக்கும் இடுக்கி அணை மூலம் கேரளா 750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறது. அதன் பின் மீதமாகும் தண்ணீர் அனைத்தும் அரபிக்கடலில் நேரடியாக கலந்துவிடும்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, நான் பாதுகாப்பாக இல்லை என்கிற அச்சத்தில் கேரள அரசியல் கட்சிகளும், பாதுகாப்புடன் பலமாக இருக்கிறேன் என்கிற நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் உள்ளன.

நான் பாதுகாப்பாக இல்லை என்று கூறி 1979 ல் மொத்த கொள்ளளவை 136 அடியாக குறைத்தது கேரளா. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் எதிரொலித்து பின்னர் கொள்ளளவு 142 அடியாக மாற்றப்பட்டது.

இடுக்கி அணையில் நீர் நிரம்ப வேண்டும் என்றால் அதற்கு இடைஞ்சலாக இருக்கும் முல்லை பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முல்லை பெரியாறு அணை பற்றிய வதந்திகளை கேரள அரசும், கேரள ஊடகங்களும் தொடர்ச்சியாக பரப்பி வந்தன.

ஒருவேளை நான் உடைந்தாலும் நிச்சயமாக கேரளாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனென்றால் முல்லை பெரியாறை விட மூன்று மடங்கு அதிகம் அதாவது 72 டிஎம்சி கொள்ளவை கொண்டது இடுக்கி அணை.

முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் வெள்ளம் பாய்ந்துவரும் வழியில் எந்த ஊர்களும் இல்லை. மலைகளுக்கு நடுவிலும், காடுகளுக்கு இடையேயும் பாய்ந்து வந்து இடுக்கி அணையில் அந்தத் தண்ணீர் சேர்ந்துவிடும்.

இந்த உண்மை கேரள அரசிற்கும், மலையாள ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும். இருந்தும் இந்த அரசியல் நாடகங்கள் அரங்கேறி கொண்டேதான் இருகின்றன.

முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக சொல்லி பல ஆண்டுகளாகிறது. ஆனால் நான் தற்போதுவரை பலமாகதான் இருக்கிறேன். இன்று மட்டுமல்ல இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நான் பலமாகத்தான் இருப்பேன். ஏனென்றால் நான் தரமானவர்களால் கட்டப்பட்டேன். எனது பலத்தை பற்றி பல குழுக்கள் ஆராய்ந்து நான் நிலையாக நிற்பேன் என்றும் கூறிவிட்டன.

இவ்வளவு விஷயங்களை அறிந்தும் கேரளத்தில் தற்போது ஏற்பட்ட வெள்ளத்துக்கு முல்லை பெரியாறு அணையை திறந்து விட்டதே காரணம் என்று கேரளா குற்றம்சாட்டுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ளது தமிழக அரசு. இப்படி மாறி மாறி பல அரசியல் தாயங்களுக்கு பகடைகாயாய் உருட்டப்படுகிறேன் நான். இதனால் நமக்கு கிடைக்கும் தண்ணீரை தேக்க முடியாமல் வீணாக கடலில் கலப்பதால் பாதிக்கப்படுவது நானல்ல.

என்னை நம்பி இருக்கும் 2 லட்சத்திற்கும் அதிகமாக பாசன நிலங்களும், சுமார் 1 கோடி மக்களும் தான். இந்த அரசியல் ஆட்டங்கள் நின்றால்தான் கர்னல் ஜான் பென்னி குயிக்கால் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறாகிய நான் 155 அடிவரையிலான தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அது அணையான எனக்காக அல்ல. வறட்சி காலங்களில் தண்ணீர் இல்லாமல் திண்டாடும் உங்களுக்காக…..

Advertisement