போலி சான்றிதழ்கள், ரப்பர் ஸ்டாம்ப், சான்றிதழ்கள் தயாரித்த 5 பேர் ஒரே நாளில் கைது

649

திருப்பூரில், போலி சான்றிதழ்கள், முத்திரைகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்களை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வழக்கறிஞரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த மாசானவடிவு என்ற பெண், நீதிமன்ற ஜாமீன் மற்றும் அரசு சலுகைகளை பெறும் வகையில் போலி சான்றிதழ்களை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் திருப்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த போது போலி சான்றிதழ் மோசடி தெரியவந்தது. இதையடுத்து வட்டாட்சியர் ஜெயக்குமார் தலைமையிலான, அதிகாரிகள் பின்னாலடை நிறுவன உரிமையாளர் மாசானவடிவு, அழகுநிலையம் நடத்தி வந்த மகேஸ்வரி ஆகியோரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதைதொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் சுதாகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோன்று திருவண்ணாமலையில் அரசு அலுவலகங்களின் போலி முத்திரைகளை தயாரித்து கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக திருவண்ணாமலை கட்டபொம்மன் தெரு, காந்திசிலை உள்ளிட்ட இடங்களில் உள்ள ரப்பர் ஸ்டாம்ப் கடைகளில் மாவட்ட நீதிபதி, ஆட்சியர் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மூன்று கடைகளில் அரசு முத்திரைகள் போலியாக தயாரித்து கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்த போலி முத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாலாஜி, அரிகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் போலி முத்திரைகளை வாங்கியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, போலி முத்திரைகளை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement