SBI வங்கியே தோத்துடும்.. அச்சு அசலா.. கைவரிசையை காட்டிய கும்பல்..

744

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கமல்பாபு. இவர் தன்னை வங்கி மேலாளர் என கூறிக் கொண்டு, பண்ருட்டி வடக்கு பஜார் பகுதியில் போலியாக பாரத ஸ்டேட் வங்கியின் கிளையை தொடங்கியுள்ளார்.

வங்கி ஊழியர்கள் வந்தாலும் சந்தேகம் வராத அளவுக்கு, அச்சு அசலாக உண்மையான பாரத ஸ்டேட் வாங்கியை போன்று உருவாக்கியுள்ளனர். இதற்காக லாக்கர்கள், போலி ஆவணங்கள், போலி ரப்பர் ஸ்டாம்பு, பணம் போடும் படிவம், பணம் எடுக்கும் படிவம் என அனைத்தையும் போலியாக அச்சடிச்சு தயாரித்து வைத்துள்ளனர்.

மேலும் கணிணியில் பண்ருட்டி வடக்கு பஜார் பாரத ஸ்டேட் வங்கி என்று இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். பண்ருட்டி வடக்கு பஜாரில் புதிதாக எஸ்.பி.ஐ வங்கியின் கிளை தொடங்கப்பட்டிருப்பது குறித்து, எஸ்,பி,ஐ வங்கி வாடிக்கையாளர் ஒருவர், ஏற்கெனவே உள்ள மற்றொரு எஸ்.பி.ஐ வங்கி கிளையின் மேலாளரிடம் விசாரித்துள்ளார்.

இதையடுத்து பண்ருட்டியில் உள்ள ஸ்டேட் பாங்க் மேலாளர் வெங்டேஷ் அங்கு சென்று பார்த்த போது, அச்சு அசலாக உருவாக்கப்பட்டிருந்த போலி வங்கிக் கிளையை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மேலாளர் வெங்டேஷ் அளித்த புகாரின் பேரில், கமல் பாபு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து குமார், மாணிக்கம் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கமல் பாபுவின் பெற்றோர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் என்பதால், அவரும் வங்கிப் பணியில் சேர முயன்றுள்ளார். ஆனால் வங்கிப் பணி கிடைக்காததால், தானே போலியாக வங்கியை தொடங்க முடிவு செய்து, போலி வங்கிக் கிளையை தொடங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.