ஃபனி புயல் இன்று தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், வட மேற்கு திசை நோக்கி நகர்ந்தபடி உள்ளது. வானிலை ஆய்வு மையம் கடைசியாக கவனித்தன்படி, ஃபனி புயல், சென்னையிலிருந்து 910 கி.மீ தொலைவில் உள்ளதாம்.
இது மணிக்கு 21 கி.மீ வேகத்தில், வட மேற்கு திசை நோக்கி நகர்ந்தபடி உள்ளது. புதன்கிழமை வரை ஃபனி புயல் இவ்வாறு நகர்ந்தபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபனி புயல், இன்று மாலைக்குள் மேலும் வலுப்பெற்று, தீவிர புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், இப்புயல் அதி தீவிர சூறாவளி புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் தீவிரம் பெறுவதன் காரணமாக, கேரளாவில் இன்றும், நாளையும், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மே 2, 3ம் தேதிகளில் ஒடிசாவின் கடலோர பகுதிகளில், நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனிடையே, தென் கிழக்கு வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.