மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து உத்தரப்பிரதேச விவசாயிகள் தொடர் போராட்டம்

688

விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்ட நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர்.

நேற்று டெல்லிக்குள் நுழைய முயன்ற விவாசாயிகளை போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி அடித்தனர். விவசாயிகள் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசு காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளதாகவும், இந்த தாக்குதல் அராஜகத்தின் உச்சகட்டம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ள விவசாயிகள், விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். விவசாயிகள் இரவிலும் சாலையில் பேரணியாக சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Advertisement