சாதி மாறி காதல் திருமணம் செய்த பெண்ணை அரிவாளால் வெட்டிய தந்தை

422
telangana

தெலங்கானாவில் ஆணவக் கொலை அதிகளவில் தலை தூக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவரின் தந்தையே அரிவாளால் சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரனாய் மீது அவருடைய மனைவி அமிர்தவர்ஷினியின் தந்தை மாருதிராவ், கூலிப்படையை ஏவி பிரனாயை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அண்மையில் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர். நகர் பகுதியை சேர்ந்த மாதவி, சந்திப் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மாதவி மீது அவருடைய தந்தை மனோகர் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

நேற்று மாலை அவர்கள் 2 பேரும் எஸ்.ஆர். நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எர்ரகட்டா பகுதியில் இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த மனோகர், அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினார்.

படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மாதவியின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மனோகரை தேடி வருகின்றனர்.