நள்ளிரவில் பரவிய தீ. 10 குடிசைகள் எரிந்து சாம்பல்.

373
trichyfire13.3.19

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடையில் உள்ள குதுப்பா பள்ளம் பகுதியில் ஏராளமான குடிசைகள் உள்ளன. கடந்த திங்களன்று நள்ளிரவு 1.15 மணி அளவில் இங்குள்ள ஒரு குடிசை திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது.

அந்த தீ பக்கத்து குடிசைகளுக்கும் பரவியது. குடிசைகள் எரிவதை உணர்ந்த அப்பகுதி மக்கள் உஷார் அடைந்து வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி வெளியேற வைத்தனர்.
உடனடியாக இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி லியோ ஜோசப் தலைமையில் இரண்டு வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ பக்கத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுமார் 1½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. தீ எரிந்து கொண்டிருந்த போது 2 கியாஸ் சிலிண்டர்கள் மிகுந்த சத்தத்துடன் வெடித்ததால் அந்த பகுதியில் குண்டு வெடித்தது போன்ற சூழல் உருவானது.

தீப்பிடித்த குடிசைகளில் இருந்த சிலிண்டர்களை தீயணைப்பு படையினரும் போலீசாரும் சேர்ந்து வெளியே எடுத்து வைத்தனர். இதனால் பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் 10 குடிசைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகின. தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார். பொருட்கள் சேத விவரம் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் பற்றி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of