பயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..

707

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகே ரயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி அமைந்துள்ளது.

நேற்று இரவு இந்த கல்குவாரிக்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்கள் லாரியில் கொண்டு வரப்பட்டது. இந்த லாரி ரயில்வே கிரசர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. லாரியில் இருந்த வெடி பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியதில் லாரி சின்னாபின்னமானது.

இதில் லாரி ஓட்டுநர் மற்றும் லாரியில் இருந்த தொழிலாளர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்தால், 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதம் அடைந்து, சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

தகவல் அறிந்த சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் இறந்த தொழிலாளர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் விபத்தில் காயம் அடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement