குமரிக்கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்

594

குமரிக்கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் மேற்கு வங்க கடலில் நிலவி வந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுக்குறைந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் குமரிக்கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் வரும் 9ஆம் தேதி அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை பொருத்த வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பநிலையை பொருத்தவரை, அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸும் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement