முன்னாள் அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு.. புதுச்சேரி அரசியலில் பரபரப்பு..!

433

புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் கண்ணன் ”மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான கண்ணன் அரசியலை விட்டு கடந்த இரண்டாண்டுகளாக ஒதுங்கியிருந்த நிலையில் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பியுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராகவும், பேரவைத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்தவர் கண்ணன். கட்சித்தலைமை மீது கொண்ட அதிருப்தியாலும், உள்ளூர் அரசியல் காரணமாகவும் காங்கிரஸில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவிலும் அவரால் நீடிக்கமுடியவில்லை. காரணம் புதுச்சேரி அதிமுக பொறுப்பாளர் அன்பழகனுக்கும் இவருக்கும் பல நேரங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனிடையையே ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியலுக்கு முழுக்கு போட்டவர் இப்போது புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார்.

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய அவர், புதுச்சேரியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் படுமோசமாக உள்ளதால் களத்திற்கு வந்துள்ளதாகவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமது கட்சி புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கப்போவது உறுதி எனவும் கூறியிருக்கிறார்.

புதுச்சேரி அரசு தற்போது தவறு மேல் தவறுகள் செய்வதாகவும், நாராயணசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் எனவும் கண்னன் சபதமேற்றிருக்கிறார்.