மசூத் அசார் சொத்துக்கள் முடக்கம்.., பிரான்ஸ் அரசு அதிரடி

65

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல நாடுகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம்தான் காரணம் என அவர்களே பொருப்பேற்றனர்.இதற்கிடையில், பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனாக இருக்கும் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சீனா முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றதால் அந்த இயக்கத்துக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கப்போவதாக பிரான்ஸ் அரசு இன்று அறிவித்துள்ளது.

பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.