“செட்டில் ஆகலாம்ன்னு நெனச்சோம்” – நண்பனை கடத்திய சக நண்பர்களின் பகீர் வாக்குமூலம்

453

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த கென்னடி கிரீல் வொர்க் வேலை செய்து வருகிறார். கென்னடியின் மகன் கோகுல், லத்தேரி அருகே தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கிறார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற கோகுல் வீடு திரும்பவில்லை. கோகுலின் செல்போனில் இருந்து நள்ளிரவு அவரது தாய்க்கு போன் வந்தது.

அதில் கோகுலை கடத்தி விட்டதாகவும் அவர் உயிரோடு வேண்டும் என்றால் 3 கோடி ரூபாய் தரவேண்டும் எனவும் எதிர்முனையில் மர்மக் குரல் பேசியது.

மேலும் மகன் உயிரோடு வேண்டும் என்றால் போலீசுக்கு தகவல் சொல்லாமல் பணம் கொண்டு வரவேண்டும் எனவும் கூறியதால் தாய் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் போலீசாரிடம் விஷயத்தை சொன்னால் மகனை கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இரவுக்குள் பணம் தந்தால் மகன் காலையில் உயிரோடு வருவான் அல்லது பிணமாக வருவான் என கூறிவிட்டு தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

எதிர்முனையில் மர்மநபர் செல்போனில் பேசிய விஷயங்கள் கோகுலின் தாய் செல்போனில் ரெக்கார்ட் ஆகி இருந்தது. இது குறித்து கோகுலின் தாய் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். உடனடியாக காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து கோகுலை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

பின்னர் மீண்டும்கடத்தல் கும்பலிடமிருந்து போன் வந்தபோது அதில் பேசிய கோகுலின் தாயார் என்னால் 50 லட்சம் ரூபாய்தான் தயார் செய்ய முடிந்தது என கூறினார். அந்த பணத்தை எடுத்து கொண்டு காட்பாடியை அடுத்த வள்ளிமலை பகுதிக்கு வருமாறு கடத்தல் கும்பல் கூறியது.

ஒரு பையில் கச்சிதமாக நறுக்கப்பட்ட காகித கட்டுகளை அடுக்கி அதன்மேல் சில 2 ,000 ரூபாய் பணத்தை வைத்து கோகுலின் தாயிடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர்.

சாதாரண உடையில் போலீஸாரும் பின்தொடர்ந்தனர். வள்ளிமலைக்கு சென்றவுடன் தன்னுடைய பையில் பணம் இருப்பதாகவும் தன்னுடைய மகனை காண்பிக்க வேண்டும் என்றும் கடத்தல் கும்பலிடம் கேட்டார்.

அவர்கள் கோகுலை காண்பித்தபோது மறைந்திருந்த தனிப்படை போலீசார் கடத்தல் கும்பலை அதிரடியாக சுற்றி வளைத்து பிடித்தது. கோகுலும் பத்திரமாக மீட்கப்பட்டார். மேலும் கோகுலை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோகுல் கடத்தப்பட்டது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோகுலை கடத்திய 4 பேருமே அவருடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் என்பது நமக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்.

கோகுல் பணத்தை தண்ணி போல் செலவு செய்வதால் பணக்கார வீட்டு பையன் என்பதை தெரிந்த கொண்ட நாங்கள் அவனை கடத்தி பணம் பறித்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என திட்டமிட்டதாக தெரிவித்தனர்.

கோகுல் எப்போதுமே லிப்ட் கேட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம்.. அதனால் நாங்கள் எங்களுக்கு தெரிந்த நபரை வைத்து கோகுலுக்கு லிப்ட் கொடுப்பது போல் கடத்தி விட்டோம் என கூறினார்.

மேலும் கிடைக்கும் பணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்யவும் திட்டம் தீட்டியதாக கூறினார். ஆனால் போலீசாருக்கு மாணவன் கோகுல் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஏன் எனில் தந்தை கென்னடி ஊருக்கு சென்றுள்ளதால் கடத்தல் நாடகம் ஆடி தாயிடம் பணம் பறிக்க முயற்சித்தாரா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of