“மச்சான்.. மச்சி.. மாப்ள.. மாமு..,” நட்பின் பெருமையை உணர்த்தும் நாள்!

570

நம் வாழ்வில் பல சிறப்பு தினங்களை கடந்து வந்தாலும், எல்லோருக்கும் பொதுவாய், உளமகிழ்வோடு கொண்டாடும் ஒரே தினம் நண்பர்கள் தினம்தான்…. நட்பின் பெருமையை உணர்த்தும் இந்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்

தோழா… தோஸ்த்… தோழி, நண்பா… … மச்சான்… மச்சி….மாப்ள, மாமு, பெஸ்ட் ஃப்ரெண்ட், என் உயிரே என் உறவே, என் ஆருயிர் நட்பே, நண்பேண்டா…. என ஒவ்வொருவர் வாழ்விலும் மிகப் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துவது நண்பர்கள் தான்.

வேறு எந்த உறவுகளுக்கும் இல்லாத சிறப்பம்சமே நம் நண்பர்களை நாமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான்.பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது ஒரு கலை என்றே சொல்லலாம். பணம் தேய்ந்துகொண்டே போகலாம். ஆனால், நட்போ வளர்ந்து கொண்டேதான் போகும்.

எந்தவித ரத்த பந்தமும் இல்லாமல், தன் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு பாசம் வைக்கும் நட்பிற்கு எப்போதுமே தனி மதிப்பு தான். நட்பிற்கு ஆண், பெண் என்ற வித்தியாசமோ வயது வித்தியாசமோ கிடையாது.

நம் முன்னேற்றத்தின் முதல் படிக்கட்டு பெற்றோர்கள் என்றால், அடுத்து வாழ்க்கையில் வரக்கூடிய எல்லா படிக்கட்டுகளிலும் தோளோடு தோள் கொடுத்து தடுமாறி விழும்போது தாங்கிபிடிக்கும் உறவுதான் நட்பு, உறவினர்களே இல்லாமல் இருப்பவர்களைக்கூட பார்க்க முடியும். ஆனால் நண்பர்கள் இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பது கடினம்.

பள்ளிப்பருவத்தில், வகுப்புத்தோழனாய், விளையாட்டுநண்பனாகத் தொடங்கி சாப்பாட்டில் பங்கு போட்டுத் தொடங்கும் நட்பு கல்லூரி காலத்தில் கல்விக்கட்டணம் செலுத்தும்வரை, இன்பத்திலும் துன்பத்திலும் தொடர்வதற்கு வரம் பெற்றிருக்க வேண்டுமல்லவா?.

அழுதுகொண்டே பள்ளிக்குச் செல்லும்போது கிடைக்கும் நட்பு, பள்ளிப்பருவத்தை உணரும்போது கிடைக்கும் நட்பு, கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும்போது கிடைக்கும் நட்பு, பணிக்கு செல்லும்போது கிடைக்கும் நட்பு, காலம் கடந்து முதுமையில் கிடைக்கும் நட்பு என புதிய நண்பர்கள் கிடைத்தாலும் நட்பின் இலக்கணம் குறைவதேயில்லை.

பெற்றோர்கள், வாழ்க்கைத்துணையை போலவே நம் மகிழ்ச்சியிலும்,துக்கத்திலும் பங்கு கொள்வதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாய் தந்தையிடமும், மனைவியிடமும்,கூட ஆலோசனை செய்ய முடியாத பல விடயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவை எளிதாக பெறமுடியும், தொலைந்து போன நட்பை மீண்டும் நம்மோடு சேர்ப்பதில் சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

இன்று நண்பர்கள் தினம். பேஸ்புக், டிவிட்டர் எங்கு பார்த்தாலும் நட்புப் பகிர்வுகள், பதிவுகள் தடபுடலாக உள்ளன. துன்பம் வரும் வேளையில் இறைவனை நினைத்த அடுத்த வினாடி உதவி கேட்க நல்ல நண்பர்களைப் பற்றிய எண்ணம் நம்மையும் அறியாமல் நம் மனதில் உதயமாகிவிடும்,பரஸ்பரம் அன்பை மட்டும் அல்லாமல் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆற்றல் நட்புக்கு மட்டுமே உரிய சிறப்பாகிறது.

சில நேரங்களில் நண்பர்கள் ஏமாற்றுவதும் உண்டு, ஆனால் உடுக்கை இழந்தவன் கைபோல கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உதவும் நண்பர்களே ஏராளம். நல்ல நட்பு கிடைப்பது அரிதான ஒன்று…. கிடைத்த நல்ல நட்பை போற்றுவது அதை விட முக்கியமானது…. நட்பின் பெருமையை உணர்ந்த ஒவ்வொருவருக்கும் இந்த தினம் மட்டுமில்லாமல் அனைத்து தினமும் நண்பர்கள் தினமே….

காவியத்தில் கர்ணன் -துரியோதனன்… இலக்கியத்தில் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார், வரலாற்றில் ஒளவையார் – அதியமான், அரசியலில் ஃபிடல் கேஸ்ட்ரோ – சேகுவாரா என ஏராளமான நட்பின் உன்னதங்கள் உலகவரலாற்றில், காலமெல்லாம் போற்றப்படுகின்றன….நட்பை போற்றும் எல்லா உள்ளங்களுக்கும் சத்தியம் தொலைக்காட்சியின் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of