அயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,

939

மிகவும் பரபரப்பாக நடந்து வந்த அயோத்தி வழக்கு இறுதி கட்டத்தை எட்டி இறுதி தீர்ப்பும் வரவுள்ளது. இந்நிலையில், அயோத்தி வழக்கு கடந்த வந்த பாதையை பார்க்கலாம்.

அயோத்தியில் பாபர் மசூதி 1528ம் ஆண்டு கட்டப்படுகிறது. இந்த இடம் இந்துக்களால் ராமர் பிறந்ததாக நம்பப்படும் பகுதியாகும். மசூதி கட்டப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக அந்த பகுதியில் இரு தரப்பிற்கும் நடுவே மோதல் நடந்துள்ளதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

இதையடுத்து பிரிட்டிஷ் அரசாங்கம் தனித்தனியே வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தது. எனினும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. அதன் பிறகு 1949ம் ஆண்டு பாபர் மசூதியின் உள்ளே ராமர் சிலைகள் நிறுவப்பட்டன.

இதைத் தொடர்ந்து பிரச்சனை அதிகரிக்கவே இரு தரப்பினருமே நீதிமன்றம் சென்றனர். இரு தரப்பையும் விசாரித்த நீதிமன்றம் மக்கள் நுழைய தடைவிதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பை வரிசையாக பார்க்கலாம்.

1990: பாபர் மசூதியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டது. அப்போதைய பிரதமரான சந்திரசேகர் இரு தரப்பையும் சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

டிசம்பர் 61992: கரசேவகர்களால் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

1992: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதனால் நாடு முழுக்க இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் கலவரமாக மாறி இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இரு தரப்பும் மோதியதில் சுமார் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

டிசம்பர் 16 1992: பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி லிப்ரான் தலைமையில் ஓரு நபர் ஆணையத்தை உள்துறை அமைச்சகம் அமைத்தது. மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜனவரி 2002: அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இரு மத தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த அயோத்தி பிரிவு என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

பிப்ரவரி 2002: கோவில் கட்டுவதற்காக அயோத்திக்கு சென்று கொண்டிருந்தவர்கள் இருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத் மாநிலம் கோத்ரா என்ற இடத்தில் தீ வைக்கபட்டது. இதில் 59 பேர் பலியாகினர்.

மார்ச் 2002: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் மிகப்பெரும் மத கலவரம் வெடித்தது. இதில் இரண்டாயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

ஏப்ரல் 2002: பாபர் மசூதி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து உத்திரபிரதேச உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணையை தொடங்கியது.

ஜனவரி 2003: விசாரணையைத் தொடங்கிய உயர்நீதிமன்றம் தொல்லியல் துறை மூலம், சர்ச்சைக்குரிய இடத்தில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 2003: தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் மசூதி இருந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.

ஜூலை 2005: சர்ச்சைக்குரிய இடத்தில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

ஜூன் 2009: 1992ம் ஆண்டு அமைக்கபட்ட லிப்ரான் கமிஷன் 48முறை கால நீட்டிக்கப்பட்டு 17 வருட விசாரணைக்கு பிறகு தனது அறிக்கை சமர்பிப்பு. அந்த அறிக்கையின் படி பாஜக தலைவர்களுக்கு பாபர் மசூதி இடிப்பில் தொடர்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

செப். 2010: 19 வருடங்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை மூன்றாக பிரித்து, சன்னி வக்ஃபு வாரியம், ராம் லல்லா மற்றும் நிர்மோகி அக்கரா அமைப்புகளுக்கு வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இரு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட் சென்றனர். 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மே 2011: அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

பிப் 2016: சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார் சுப்ரமணியன் சுவாமி

மார்ச் 2017: அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

ஆக 2017: உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்தது.

பிப் 2018: பாபர் மசூதி பிரச்சனை தொடர்பாக தனிநபர்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் துவங்கியது.

ஜூலை 2018: உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

ஜன 08 2019: அயோத்தி வழக்கு குறித்து விசாரிக்க தலைமை நீதிபதி உள்ளடக்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமைர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது.

ஜன10, 2019: ஐந்து நீதிபதிகளில் ஒருவரான யு.யு.லலித் அரசியல் சாசன அமர்விலிருந்து விலகல்

ஜன 25, 2019: யு.யு.லலித் விலகிய பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டே ஆகியோர் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.

பிப் 26, 2019: அயோத்தி வழக்கில் சமரச தீர்வை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து.

மார்ச் 08, 2019: அயோத்தி வழக்கில் சமரச தீர்வை ஏற்படுத்த 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு நியமிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரைக் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. 8 வாரத்திற்குள் பேச்சுவார்த்தையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.

மே 10, 2019: சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சமரச குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஆக 01, 2019: மூவர் கொண்ட சமரச குழு தமது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தது.

ஆக 02, 2019: சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்தது.  சமரச பேச்சுவார்த்தை தோல்வியால் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினமும் அயோத்தி வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

ஆக 06,2019: அயோத்தி வழக்கு விசாரணையை தொடங்கியது உச்சநீதிமன்றம்.

செப் 26,2019: அயோத்தி வழக்கு தொடர்பான அனைத்து விசார ணைகளையும் ஆக 17ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

அக் 14, 2019: அயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடக்கம். 4 நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக விசாரிக்கப்படுகிறது.

அக்14,2019: வழக்கு முடிய உள்ள நிலையில் அயோத்தியில்144 தடை உத்தரவு அமல். டிசம்பர் 10 வரை 144 தடை அமலில் இருக்கும் என்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விசாரணை அக்டோபர் 17 ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் 1992ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு இறுதி தீர்ப்பு வெளியாக உள்ளது.