கஜா புயல் பாதிப்புகள் ஒரு வாரத்திற்குள் அறிக்கை – மத்திய ஆய்வுக் குழு

183
central-committee

கஜா புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை ஒரு வாரத்திற்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய ஆய்வுக் குழு தலைவர் ரிச்சர்ட் டேனியல் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட்டு, நிவாரண நிதி கோரி மத்திய குழுவினரிடம் முதலமைச்சர் அறிக்கை தாக்கல் செய்தார். முதலமைச்சர் நாராயணசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு தலைவர் ரிச்சர்ட் டேனியல், புதுச்சேரி அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், காரைக்காலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், காரைக்காலில் உட்கட்டமைப்பு, மீனவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யப்படும் எனவும் ரிச்சர்ட் டேனியல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here