“கஜா புயல்” – தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

1018

கஜா புயல் காரணமாக ஏற்கனவே கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்த நிலையில், தற்போது தஞ்சை மாவட்டத்திலும் நாளை விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூருக்கும் – பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டிருந்தார். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தஞ்சை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பேரிடர் மீட்புக்குழுவினரும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனர்.

Advertisement